Monday, October 11, 2010

சின்ன சின்ன ஆசை

பக்கத்துவீட்டில் ஒரு சின்னபெண் நீண்ட நாட்களாக என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் “அக்கா நாம ஞாயிற்றுக்கிழமை நடக்குர சந்தைக்கு கண்டிப்பா போகனும்” என்று நானும் ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமை காலைவேளைகளில் அவளை பார்க்கும்போதெல்லாம் இன்னைக்கு போகலாம் போகலாம் என்று தள்ளிக்கொண்டே வந்துகொண்டிருந்தேன்.

ஒவ்வொரு வாரமும் எதோ ஒரு வேலைகளில் மூழ்கிப்போய் அவளின் தீராத ஆசையை தள்ளிவைத்துக்கொண்டே சென்றது. அவளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு குற்ற உணர்ச்சி உறுத்திக்கொண்டே இருந்தது, காரணம் அவளை சந்தைக்கு அழைத்துச்செல்லாமல் போனது தான். இதற்கு காரணம் அவளுக்கு வீட்டில் அப்பா அம்மா, உடன் பிறந்தோர் இருந்திருந்தால் அவள் என்னிடம் கேட்க அவசியமே இல்லாமல் இருந்திருக்கும். அவள் பிறந்த உடன் அவளுடைய அம்மா கணவனிடம் எதோ சண்டைபோட்டு தீக்கிரையாகி, மனைவி போன துக்கத்தில் கணவனும் தூக்குபோட்டுக்கொண்டு பிள்ளைகளை பாட்டியிடம் தவிக்கவிட்டு சென்றுவிட்டனர்.

கடமை தவறிய பெற்றோர்கள் இறந்தாலும் வறுமையில் பாசத்திற்க்காக ஏங்கித்தவிக்கும் பிள்ளைகள், வாழ்க்கையில் இதுபோன்ர தவறான முடிவெடுத்து வாழ்க்கை விடுத்து பிள்ளைகளை அனாதையாக்கிய இவர்களை போன்றோர்களுக்கு மேலுலகம் போனாலும் சொர்க்கம் கிடைக்காது என நம்புகிறேன். பாட்டி,தாய்மாமன், சித்தி இவர்களிடமே வளர்ந்து வந்திருந்தாள். எங்கேயும் அவளை அனுப்புவதில்லை. அப்படியே சென்றாலும் எங்கள் தெருவிலுள்ள பெண்களை நம்பிமட்டுமே அனுப்பும் பாட்டி.

சிறுவயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்தாள். அவளுடைய உலகம் 50மீட்டருடைய எங்களுடைய தெரு. இது மட்டுமே, எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவாள், பேசுவாள், அவளுடைய அன்னை தந்தையை பிரிந்த துயரை அடிக்கடி அழுது தன் கஷ்டத்தை ஆற்றிக்கொள்வாள். நாங்களும் அவளுக்கு அடிக்கடி ஆறுதல் சொல்லி அனுப்பிவைப்போம்.

இப்போது அவளுக்கு திடீரென சந்தைக்கு போக ஆசை, கிளப்பிவிட்டது நானே! நாம் தான் உளறுவாய்களாச்சே! நான் சில பொருட்களை வாங்கவேண்டும் சந்தையில் கிடைக்கும் போகலாமா என்றேன் சொன்ன மாத்திரம் அவள் பிடித்துக்கொண்டாள்.

எனக்கும் பல நாள்களாக சந்தைக்கு போகவேண்டுமென்ற ஆசை ஆனால் கிடைக்கும் ஒரேயொரு விடுமுறைநாளில் ஏன் வீணாக சுற்றியலைந்து திரிய வேண்டுமென்ற சோம்பேறித்தனத்தில் போகாமல் விட்டுவிட்டேன். இவளோ அடிக்கடி ஞாபகப்படுத்துவதிலே ஆர்வமாகி விட்டாள்.

அன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வீட்டிற்கு வந்து என்னுடைய அந்நாள் செயல்களைகேட்டுக்கொண்டாள்

“கலா இன்னைக்கு என்னென்ன வேலைகள் இருக்கு உனக்கு இப்பவே சொல்லிடு இன்னைக்கு சாயங்காலம் நாம சந்தைக்கு கண்டிப்பா போறோம்”

”இன்னைக்கு எந்தவேலையும் இல்ல பாரதி நாம கண்டிப்பா சந்தைக்கு போறோம்” என்றேன்

”சாயங்காலம் 4 மணிக்கு ரெடியாகி இரு நான் உன்னோட வரேன்” குறித்துவிட்டாள் நேரத்தை நான் ரெடியாக வேண்டுமே!

அன்றைய பொழுது சூப்பரான அசைவ சமையலோடும் தூக்கத்தோடும் எந்த கஷ்டமில்லாமலும் சென்றது, இப்போது ஆகிவிட்டது 4 மணி...வந்து வாசலில் நின்று விட்டாள் பாரதி

“என்ன கலா நீ இன்னும் ரெடியாகலையா நாம எப்போ போறது சந்தைக்கு சீக்கிரம் ரெடியாகு”

”அச்சச்சோ அதுக்குள்ள வந்துட்டியா நீயி இதோ அஞ்சு நிமிசத்துல ரெடியாகுறேன்” ம்கும் அஞ்சு நிமிசத்துலயா சான்சே இல்லை ரெடியாகுரதுன்னா சும்மாவா எத்தனை வேலை செய்யனும் ஹையோ மனத்தின் ஓலக்குரலோடே உள்ளே சென்றேன்.

”சீக்கிரம் ரெடியானியா கலா” வார்னிங் வந்துவிட்டது

“இதோ முடிஞ்சிடுச்சு” ம்கும் இப்போ தான் தலையை வாரிட்டு இருக்கேன், அதுகிடக்கு 4அடி முடி அதை சீவி வாரிமுடியரதுக்குள்ள எனக்கு இருக்கர கஷ்டம் எனக்கு தானே தெரியும் ம்ஹ்ம்! இவளுக்கென்ன குடுகுடுன்னு ரெடியாகி வந்துட்டா....

”இதோ வந்துட்டேன் பாரதி” என்றவுடன் இரண்டு முழம் பூவை என் தலையில் சொருகினாள்.

”அந்த பர்சை எடுத்துக்கிட்டியா, குடையை மறக்காம எடுத்துக்கோ மழை வரும், எல்லாத்தையும் ஒழுங்கா வச்சிக்கோ என்னென்ன வேணுமோ அதெல்லாம் சரியா வாங்கிக்கோ அப்ரம் அதுவாங்கலை இது வாங்கலைன்னு வந்து புலம்பினே கட்டையிலே அடிவிழும்” அம்மா மிரட்டலோடு வழியனுப்பி வைத்தாள்.

நாங்களும் பதினாறுவயதினிலே ஸ்ரீதேவியைப்போல ஒரே சந்தோசமுகத்தோடு பஸ் பிடிக்க நடந்து சென்றுகொண்டிருந்தோம்.... போகும் வழியிலயே என்னென்ன வாங்கவேண்டுமென்று சில பொருட்களின் பெயர்களையெல்லாம் குறித்து வைத்துக்கொண்டோம். வருவோர் போவோர் எல்லாம் ஒரு விதமாகவே பார்த்தார்கள் அதற்கு காரணம் நாங்கள் இருவரும் எதோ திருவிழாவிற்கு போவது போல் மிக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தோம்.

நடுவில் புகுந்த நரியை போல் பாரதியின் தாய்மாமன் எதிரே வந்துவிட்டான், நாங்களும் அவனை கவனிக்காமல் எங்களின் திட்டங்களோடும் பேச்சுகளோடும் சென்றுகொண்டிருந்தோம்

“பாரதி இந்த நேரத்துல எங்கம்மா போறே” என்றான்

“அது வந்து........ அது வந்து......... மாமா சந்தைக்கு போறோம்” தயங்கிக்கொண்டே சொன்னாள்

“என்னது வயசுப்பொண்ணு சந்தைக்கு போறியா... அப்பன் ஆத்தா இல்லாதவன்னு உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தா இப்போ சந்தைக்கு போறேன் அது இதுன்னு சொல்லிட்டு இருக்கியா, உன்னை ஒருத்தனுக்கு கட்டிவைக்கிர வரைக்கும் நீ எங்கேயும் போகக்கூடாது, திரும்பி நட” என்று ஓயாத இரைச்சலுடன் மிரட்டிவிட்டான்.

பாரதி பயந்து போய் பதில்பேசமுடியாமல் திணறினாள்..

அத்தனை ஆசைகளையும் மூட்டைக்கட்டிக்கொண்டு வந்த வழியே திரும்பி சென்றுவிட்டார்கள் பாரதியும் கலாவும் :(

No comments:

Post a Comment