Thursday, October 14, 2010

ராங் கால் ஜொள்ஸ்!

பாஸ் (எ) பாஸ்கரன்ல சொல்ர மாதிரி இந்த கணேஷும் என்னை புலம்ப வச்சிட்டு இருக்கான், காலைலேர்ந்து 10 மிஸ்டு கால்ஸ் 5 மெசேஜஸ் இவன் தொல்லை தாங்கலை.. எத்தனை ஃப்ரண்ட்ஸ் இருந்தாலும் சில ஃப்ரண்ட்ஸ் பண்ர அலம்பல்

காலைல அவனுக்கு எதோ ஒரு பொண்ணு மெசேஜ் பண்ணிட்டாளாம். அதுவும் இங்கிலிஷ்ல நம்ம தம்பிக்கு இங்கிலிஷ்ல கொஞ்சம் இல்லை ரொம்ப டல் தான். அவ்ளோ தான் போச்சு காலைலேர்ந்து பஸ்ல என்னைத்தவிர ஒருத்தரையும் விடக்காணோம், எல்லாரும் அந்த மெசேஜை படிச்சிட்டு எனக்கு தெரியாதுன்னு கையவிரிச்சிட்டாங்க. இவரு ஒரே ஃபீலிங்க்ஸ்ல அந்த பொண்ணு என்ன அனுப்பியிருக்குன்னு ஒன்னு புரியாம ஒருத்தனை ஒருத்தன் பாத்துகிட்டு முழிச்சது தான் மிச்சம். என்ன கொடுமைடா சாமி காலைலயே மண்டைய பிச்சிக்கிட்டு அலைஞ்சிருக்காங்க.

நல்லவேளை நான் மட்டும் காலைல பஸ் ஏறியிருந்தேன்னா என்னை ஒரு வழி பண்ணியிருப்பான். “ஹாய் அக்கா குட்மார்னிங்”னு சொல்லி மொக்கைபோட்டு கழுத்தறுத்திருப்பான். கடவுளா பாத்து இன்னைக்கு பஸ்சை நிறுத்தாம செஞ்சிருக்கார்.


ஆனா இந்த ஆசை நிலைக்கலையே, பஸ் நிறுத்தின அரைமணி நேரத்துலயே

ட்ரிங் ட்ரிங்................ கணேஷ் காலிங்

”என்னடா கணேஷ் சொல்லு”


”அக்கா எப்படி இருக்கே, சாப்பிட்டியா ஏன் இன்னைக்கு பஸ்ல வரல”

ஆரம்பிச்சிடாண்ட இவன் மொக்கையைன்னு நினைச்சிக்கிட்டேன்.


”நல்லா இருக்கேன் சாப்பிட்டேன் பஸ் இன்னைக்கு என் ஸ்டாப்ல நிறுத்தவே இல்லடா அதான் வரலை ஆமா நீ எதோ மெசேஜ் புரியலைன்னு சிவாகிட்ட சொன்னியாமே என்னடா மெசேஜ் அது”


”அக்கா ஆமாம் அந்த மெசேஜ் யாரோ ஒரு பொண்ணு அனுப்பிச்சு என்னன்னு தெரியலை”

“பொண்ணா! என்னடா சொல்ரே யாருன்னு தெரியுமா, தெரியலைன்னா போன் பண்ணி கேக்கவேண்டியது தானே?”

“தெரியல அக்கா அந்த பொண்ணு பேரே சொல்லலை ஊரும் சொல்லலை ஆனா காலேஜ் மட்டும் படிக்கிரேன்னு சொல்லுச்சு”


”எந்த காலேஜ்ன்னாச்சும் கேட்டியாடா! உனக்கு பயமா இருந்தா என்கிட்ட நம்பர் குடு கேக்குரேன்”

”வேணாம் அக்கா நீ பேசாதே அப்ரம் அந்த பொண்ணு மெசேஜ் பண்ரதைகூட நிறுத்திடும் ஹி ஹி மெசேஜ்க்கு அர்த்தத்தை மட்டும் சொல்லு அதான் புரியலை”

”டேய் லூசாடா நீ பேரும் தெரியலை ஊரும் தெரியலை எவளோ ஒருத்தி அனுப்பின மெசேஜை டெலிட் பண்ண வேண்டியது தானே”

“இல்லக்கா அதுல கடைசியில மட்டும் ”மஸ்ட் ரிப்ளை மீ”ன்னு இருந்துச்சு அப்படின்னா நாம ரிப்ளை பண்ணி தானே ஆகனும் அதானால அதை மட்டும் சொல்லு”

“என்ன கருமமோ மெசெஜை அனுப்பித்தொலை சொல்ரேன்”

கொஞ்ச நேரத்தில் மெசெஜ் பறந்து வந்தது. மத்த நேரத்துல ஒரு குட்மார்னிங் சொல்லக்கூட இவனுங்ககிட்ட பேலன்ஸ் இருக்காது இப்ப மட்டும் எப்படியோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.


“If u get a chance to convert me into non-living thing and keep it with u ,what would u turn me into and why?”

அட பன்னாடை பயலுவலா டேய் இந்த மெசேஜாடா புரியலை உங்களுக்கு என்னத்த பன்னெண்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்சு கிழிச்சீங்களோ!!

ம்ஹ்ம் அனுப்பின அரை செகண்ட்லயே மறுபடியும் போன்.......

கட் செய்துவிட்டேன் இன்னும் மெசேஜை முழுசாகூட படிச்சு முடியலை அதுக்குள்ள என்ன தான் அவரசமோ!!

அதுக்குள்ள வேர வேலை வந்துடுச்சுன்னு எட்டிபாக்கரதுக்குள்ள எட்டு மெசேஜ்

நானே போன் பண்ணி “டேய் அது வேர ஒன்னுமில்லைடா அந்த பொண்ணை உயிரில்லாத பொருளா மாத்தி உன் கைல வச்சிக்கிட்ட என்ன பொருளா மாத்துவே ஏன்’னு கேட்டிருக்கா அவ்ளோ தாண்டா”

“அப்படியா அப்படின்னா நான் இப்பவே ரிப்ளை பண்ணிடுறேன் அக்கா”

“டேய் ஊர்பேர் தெரியாத பொண்ணுக்கு என்னடா ரிப்ளை பண்ணுவே”

“ஹி ஹி ஹி எதோ ஒன்னு பண்ணப்போறேன் அக்கா”


“டேய் ஏடாகூடமா எதாவது அனுப்பி இன்னைக்கு பல்புவாங்கப்போறே தெரியாத நம்பர்க்கெல்லாம் பதில் அனுப்பாதேடா”

“இல்லக்கா அந்த பொண்ணு என் பேரை தெளிவா சொல்லுதே”

”எப்படியோ போய் தொலை என்றேன்”

”ஹி ஹி ஹி சரிக்கா “என்று வைக்கிறேன் என்று கூட சொல்லாமல் வைத்துவிட்டான்.

பயபுள்ளை பல்பு வாங்கும்னு பாத்தா அந்த பொண்ணை மடக்கிட்டு வந்து நிக்குது.

மறுநாள் போன் செய்தான் “அக்கா ரொம்ப தேங்க்ஸ் அக்கா நீ சொன்னதை வச்சு அப்படியே ஒரு கவிதை மாதிரி எழுதிட்டேன் பொண்ணு க்ளிக் ஆகிடுச்சு” என்றான்.


“டேய் என்னடா இதெல்லாம் களவாணிப்பயலே இதெல்லாம் தேவையாடா உனக்கு, சரி நீ என்னன்னு ரிப்ளை பண்ணீனே அதைச்சொல்லு முதல்ல”“சரிக்கா சொல்ரேன் என்ன திட்டக்கூடாது சரியா” என்று பால்வடியும் முகத்தோடு கேட்டேன்“சரி சொல்லித்தொலை நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்று அரக்ககத்தினேன்.........

“ம்ம்ம்க்ர்ம்ம்....” என்று தொண்டையை சொருமிக்கொண்டு மெதுவாக சொல்ல ஆரம்பித்தான்“மலரென்று சொன்னால்

காய்ந்துவிடுவாய்

நிலவெனச்சொன்னால்

தேய்ந்துவிடுவாய்

என் மூச்சென சொன்னால்

அரைநொடியில்

என்னிலிருந்து விலகிவிடுவாய்என் இதய துடிப்பினில்

இடைவெளியிலும் நீயே

நிறைந்திருக்கிறாய்

உனை ஒப்பிட்டு பார்க்க

எனக்கேதும் தெரியவில்லை

என்றும் என்னுடன் வாழும்

கடவுளாய் உன்னை மாற்ற

விரும்புகிறேன்”

”எதோ கொஞ்சமா இதை தான் அக்கா கிறுக்கினேன்” என்று எதுவும் தெரியாத பிள்ளைபோல கூறினான்.

“அடடா டேய் பயபுள்ளை தெரியாத பொண்ணுகிட்ட நல்லாவே லாக் ஆகியிருக்கான்” என்று புரிந்துகொண்டு


”எப்படியோ நல்லா இருந்தா சரி தான் போடா” என்று துரத்திவிட்டேன்.....

இந்த பயலுங்ககிட்ட ஃப்ரண்ட்ஷிப் வச்சிக்கிரத விட எங்கயாச்சும் ஓடிபோய்டலாம் தொல்லைதாங்கலைடா சாமி!! ஹையையையையோ!!! :))

Monday, October 11, 2010

சின்ன சின்ன ஆசை

பக்கத்துவீட்டில் ஒரு சின்னபெண் நீண்ட நாட்களாக என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் “அக்கா நாம ஞாயிற்றுக்கிழமை நடக்குர சந்தைக்கு கண்டிப்பா போகனும்” என்று நானும் ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமை காலைவேளைகளில் அவளை பார்க்கும்போதெல்லாம் இன்னைக்கு போகலாம் போகலாம் என்று தள்ளிக்கொண்டே வந்துகொண்டிருந்தேன்.

ஒவ்வொரு வாரமும் எதோ ஒரு வேலைகளில் மூழ்கிப்போய் அவளின் தீராத ஆசையை தள்ளிவைத்துக்கொண்டே சென்றது. அவளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு குற்ற உணர்ச்சி உறுத்திக்கொண்டே இருந்தது, காரணம் அவளை சந்தைக்கு அழைத்துச்செல்லாமல் போனது தான். இதற்கு காரணம் அவளுக்கு வீட்டில் அப்பா அம்மா, உடன் பிறந்தோர் இருந்திருந்தால் அவள் என்னிடம் கேட்க அவசியமே இல்லாமல் இருந்திருக்கும். அவள் பிறந்த உடன் அவளுடைய அம்மா கணவனிடம் எதோ சண்டைபோட்டு தீக்கிரையாகி, மனைவி போன துக்கத்தில் கணவனும் தூக்குபோட்டுக்கொண்டு பிள்ளைகளை பாட்டியிடம் தவிக்கவிட்டு சென்றுவிட்டனர்.

கடமை தவறிய பெற்றோர்கள் இறந்தாலும் வறுமையில் பாசத்திற்க்காக ஏங்கித்தவிக்கும் பிள்ளைகள், வாழ்க்கையில் இதுபோன்ர தவறான முடிவெடுத்து வாழ்க்கை விடுத்து பிள்ளைகளை அனாதையாக்கிய இவர்களை போன்றோர்களுக்கு மேலுலகம் போனாலும் சொர்க்கம் கிடைக்காது என நம்புகிறேன். பாட்டி,தாய்மாமன், சித்தி இவர்களிடமே வளர்ந்து வந்திருந்தாள். எங்கேயும் அவளை அனுப்புவதில்லை. அப்படியே சென்றாலும் எங்கள் தெருவிலுள்ள பெண்களை நம்பிமட்டுமே அனுப்பும் பாட்டி.

சிறுவயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்தாள். அவளுடைய உலகம் 50மீட்டருடைய எங்களுடைய தெரு. இது மட்டுமே, எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவாள், பேசுவாள், அவளுடைய அன்னை தந்தையை பிரிந்த துயரை அடிக்கடி அழுது தன் கஷ்டத்தை ஆற்றிக்கொள்வாள். நாங்களும் அவளுக்கு அடிக்கடி ஆறுதல் சொல்லி அனுப்பிவைப்போம்.

இப்போது அவளுக்கு திடீரென சந்தைக்கு போக ஆசை, கிளப்பிவிட்டது நானே! நாம் தான் உளறுவாய்களாச்சே! நான் சில பொருட்களை வாங்கவேண்டும் சந்தையில் கிடைக்கும் போகலாமா என்றேன் சொன்ன மாத்திரம் அவள் பிடித்துக்கொண்டாள்.

எனக்கும் பல நாள்களாக சந்தைக்கு போகவேண்டுமென்ற ஆசை ஆனால் கிடைக்கும் ஒரேயொரு விடுமுறைநாளில் ஏன் வீணாக சுற்றியலைந்து திரிய வேண்டுமென்ற சோம்பேறித்தனத்தில் போகாமல் விட்டுவிட்டேன். இவளோ அடிக்கடி ஞாபகப்படுத்துவதிலே ஆர்வமாகி விட்டாள்.

அன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வீட்டிற்கு வந்து என்னுடைய அந்நாள் செயல்களைகேட்டுக்கொண்டாள்

“கலா இன்னைக்கு என்னென்ன வேலைகள் இருக்கு உனக்கு இப்பவே சொல்லிடு இன்னைக்கு சாயங்காலம் நாம சந்தைக்கு கண்டிப்பா போறோம்”

”இன்னைக்கு எந்தவேலையும் இல்ல பாரதி நாம கண்டிப்பா சந்தைக்கு போறோம்” என்றேன்

”சாயங்காலம் 4 மணிக்கு ரெடியாகி இரு நான் உன்னோட வரேன்” குறித்துவிட்டாள் நேரத்தை நான் ரெடியாக வேண்டுமே!

அன்றைய பொழுது சூப்பரான அசைவ சமையலோடும் தூக்கத்தோடும் எந்த கஷ்டமில்லாமலும் சென்றது, இப்போது ஆகிவிட்டது 4 மணி...வந்து வாசலில் நின்று விட்டாள் பாரதி

“என்ன கலா நீ இன்னும் ரெடியாகலையா நாம எப்போ போறது சந்தைக்கு சீக்கிரம் ரெடியாகு”

”அச்சச்சோ அதுக்குள்ள வந்துட்டியா நீயி இதோ அஞ்சு நிமிசத்துல ரெடியாகுறேன்” ம்கும் அஞ்சு நிமிசத்துலயா சான்சே இல்லை ரெடியாகுரதுன்னா சும்மாவா எத்தனை வேலை செய்யனும் ஹையோ மனத்தின் ஓலக்குரலோடே உள்ளே சென்றேன்.

”சீக்கிரம் ரெடியானியா கலா” வார்னிங் வந்துவிட்டது

“இதோ முடிஞ்சிடுச்சு” ம்கும் இப்போ தான் தலையை வாரிட்டு இருக்கேன், அதுகிடக்கு 4அடி முடி அதை சீவி வாரிமுடியரதுக்குள்ள எனக்கு இருக்கர கஷ்டம் எனக்கு தானே தெரியும் ம்ஹ்ம்! இவளுக்கென்ன குடுகுடுன்னு ரெடியாகி வந்துட்டா....

”இதோ வந்துட்டேன் பாரதி” என்றவுடன் இரண்டு முழம் பூவை என் தலையில் சொருகினாள்.

”அந்த பர்சை எடுத்துக்கிட்டியா, குடையை மறக்காம எடுத்துக்கோ மழை வரும், எல்லாத்தையும் ஒழுங்கா வச்சிக்கோ என்னென்ன வேணுமோ அதெல்லாம் சரியா வாங்கிக்கோ அப்ரம் அதுவாங்கலை இது வாங்கலைன்னு வந்து புலம்பினே கட்டையிலே அடிவிழும்” அம்மா மிரட்டலோடு வழியனுப்பி வைத்தாள்.

நாங்களும் பதினாறுவயதினிலே ஸ்ரீதேவியைப்போல ஒரே சந்தோசமுகத்தோடு பஸ் பிடிக்க நடந்து சென்றுகொண்டிருந்தோம்.... போகும் வழியிலயே என்னென்ன வாங்கவேண்டுமென்று சில பொருட்களின் பெயர்களையெல்லாம் குறித்து வைத்துக்கொண்டோம். வருவோர் போவோர் எல்லாம் ஒரு விதமாகவே பார்த்தார்கள் அதற்கு காரணம் நாங்கள் இருவரும் எதோ திருவிழாவிற்கு போவது போல் மிக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தோம்.

நடுவில் புகுந்த நரியை போல் பாரதியின் தாய்மாமன் எதிரே வந்துவிட்டான், நாங்களும் அவனை கவனிக்காமல் எங்களின் திட்டங்களோடும் பேச்சுகளோடும் சென்றுகொண்டிருந்தோம்

“பாரதி இந்த நேரத்துல எங்கம்மா போறே” என்றான்

“அது வந்து........ அது வந்து......... மாமா சந்தைக்கு போறோம்” தயங்கிக்கொண்டே சொன்னாள்

“என்னது வயசுப்பொண்ணு சந்தைக்கு போறியா... அப்பன் ஆத்தா இல்லாதவன்னு உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தா இப்போ சந்தைக்கு போறேன் அது இதுன்னு சொல்லிட்டு இருக்கியா, உன்னை ஒருத்தனுக்கு கட்டிவைக்கிர வரைக்கும் நீ எங்கேயும் போகக்கூடாது, திரும்பி நட” என்று ஓயாத இரைச்சலுடன் மிரட்டிவிட்டான்.

பாரதி பயந்து போய் பதில்பேசமுடியாமல் திணறினாள்..

அத்தனை ஆசைகளையும் மூட்டைக்கட்டிக்கொண்டு வந்த வழியே திரும்பி சென்றுவிட்டார்கள் பாரதியும் கலாவும் :(

Wednesday, October 6, 2010

“காலப்பயணிகள்/ ஒரே ஒரு ஊரிலே”

முதலில் இப்பொன்னான புத்தகத்தை எழுதி எங்களுக்கு அளித்த திரு. விழியன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
காலப்பயணிகள்/ஒரே ஒரு ஊரிலே ஆகிய இரு கதைகளும் குழந்தைகளுக்கு மிகவும் பயனளிக்க்கூடியவை. குழந்தைகளுக்காக எழுதப்பட்ட இந்நூல் மிகவும் அருமையாக இருந்த்து. நாம் இந்த நூலை படிக்கும்போது சிறுவயது குழந்தைகளாக மாறிவிடுவோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. குழந்தைகளின் தெளிவான பேச்சு, வழக்கமான நகைச்சுவைகள், அறிவார்ந்த செயலாற்றல்கள், அவர்களுடைய வாழ்வியல் அனுபவங்கள் அனைத்தும் இக்கதையின் ஆசிரியர் அழகிய நயத்துடன் எழுதியுள்ளார்.முதலில் காலப்பயணிகள் என்ற கதை என்னை மிகவும் கவர்ந்த்து. நான்கு மாணவர்களின் படிப்புத்திறன்,விளையாட்டு, அவர்களுடைய சுறுசுறுப்பு, எதையும் அறிந்து கொள்ளும் ஆவல் இப்படி குழந்தைகளுக்கே உரிய பண்புகளை அழகாக கதையுடன் இழைத்திருந்தார். நான்கு மாணவர்களிடம் கிடைத்த மந்திர புத்தகமும் அதன் மூலம் அவர்கள் பயணித்த பல்வேறு காலங்களை அழகாக விவரித்திருந்தார். அந்த மந்திரப்புத்தகத்தின் பற்றி வாசிக்கும்போதே படிப்பவர்களுக்கும் ஒரு அழகான இட்த்திற்கு செல்லபோகிறோம் என்கிர சுவாரசியம் அக்குழந்தைகளோடு நமக்கும் ஒட்டிக்கொள்வது எழுத்தாளரின் எழுத்து திறமை எனலாம். அந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள புதிரையும் அதற்கான விடையையும் அறிந்து கொள்ள ஓவ்வொரு காலத்தையும் அதற்குரிய வளமையும் எடுத்துரைத்த விதம் மிகவும் அருமை. விடையை கண்டுபிடிக்க மாணவர்கள் தங்கள் திறமையையும் அதன் மூலம் அவர்களோடு நாமும் பெறுகிர அனுபவம்வளமான வாழ்க்கைக்கு நேரத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கினை மாணவர்களிடமிருந்து தொடங்க வேண்டும் என்கிற பாங்கு மிகவும் அருமையாக இப்புத்தகத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மாணவர்கள் பல்வேறு காலங்களுக்கு சென்று நேரடியான அனுபவத்தை பெறுவது போன்ற கதையமைப்பு படிப்பவர்களையும் அந்த காலத்திற்கு சென்று அனுபவம் பெற்றது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது மிகவும் அருமை. மாணவர்கள் மந்திரப்புத்தகத்தின் மூலம் புராண காலத்திற்கு சென்று தக்க நேரத்தில் சரியான உதவியை செய்யவேண்டுமென்ற கருத்தை அழகாக எழுதியிருந்தார். அடுத்து விடுதலை போராட்ட காலத்திற்கு சென்று நம்முடைய பண்பாடு கலாச்சாரம் வீரம் விருந்தோம்பல் கொடை ஆகிய அனைத்தையும் அறிந்து கொள்ளமுடிகிறது. மூன்றாவதாக மந்திரப்புத்தகத்தின் மூலம் மாணவர்கள் முன்னோக்கிய காலத்திற்கு சென்ற அனுபவம் நாம் புத்தகத்தை படிக்கும்போது நம்மையும் அந்த இட்த்திற்கு கொண்டு செல்கிறது கதை. முன்னோக்கிய காலத்தில் நாம் பாதுகாக்க வேண்டிய இயற்கை வளமும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய கருத்தும் மிகவும் கவருகிறது.ஒரே ஒரு ஊரிலே கதை படிக்கும்போது நம்முடைய பள்ளிப்பருவ காலம் கண்முன்னே தோன்றுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நான்கு மாணவர்கள் மற்றும் நாய்க்குட்டி என கதை மிக சுவாரசியமாக உள்ளது. மாணவர்கள் படிப்பு, விளையாட்டு, அரண்மனை, நண்பர்கள், சுற்றுலா, கலாட்டா என குழந்தைகளுக்கே உரிய பண்புகளை கதையுடன் அழகாக எழுதியுள்ளார். நாய்க்குட்டியின் சுய அறிமுகம் மிகவும் அருமை. மாணவர்களின் மலை சுற்றுலா அந்த ரகசிய நீருற்று அனைத்து காட்சிகளும் கண்முன் நிற்கின்றன. அங்கே அவர்களுடன் உறவாடும் சிறுமி, கண்ணாமூச்சி விளையாட்டு என அற்புதமாக சுற்றுலா பயணம் நகர்கிறது.இந்த புத்தகத்தின் மூலம் மாணவர்கள் நேரத்தினை தங்களுக்கேற்ப சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் வளமாக வாழ வேண்டுமென்ற கருத்தினை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.