Saturday, November 27, 2010

ஒன்னாங்கிளாஸ் சண்டை:: ஒரு சின்ன புனைவு

திங்கட்கிழமை காலைல நான், அழகா குளிச்சு தலையை எண்ணெய் சட்டியில முங்கி எடுத்து வழிச்சு வாரி விட்டு நெத்தியில திருநீரை நல்லா ஒரு வரிப்பட்டை மாதிரி இழுத்து கைல ஒரு துணிப்பை, அதுல ஒரு குட்டியா கரும்பலகை பைக்கு பேலன்ஸ் அந்த பலகை தான் சரியா இருக்கும் அந்தப்பையை வலது தோள்ல மாட்டிக்கிட்டு அம்மாகிட்ட போனேன்



அம்மா குடுத்த ஒரு ரூபாயை எடுத்துக்கிட்டு அண்ணாச்சி கடைக்கு போய் “தாத்தா எனக்கொரு பல்பம் வேணும்”னு முகத்தை சிணுங்கி வச்சிக்கிட்டு ஒரு ரூபாயை நீட்டினேன்.



கடைக்காரரும் “இந்தாப்பா”ன்னு ஒரு விரல் நீள மண்ணுபல்பத்தை கையில குடுத்தார்....



ஒரே நேர்பார்வையில வச்ச கண்ணு வாங்காம நான் க்ளாஸ்ல முதல் வரிசையில ரெண்டாவது ஆளா உட்கார்ந்தேன்...



எல்லாப்பசங்களும் வரவரைக்கும் அமைதியா பலகையும் பல்பத்தையும் மாறி மாறி பாத்துகிட்டு அம்மூஞ்சி மாதிரி அமைதியா இருந்தேன் நான் ...

கொஞ்ச நேரத்துல பக்கத்துல ஒரு பையன் என்னை மாதிரியே எண்ணெய் வழிச்சு வாரிட்டு “ஹி ஹி ஹி”ன்னு சின்ன சிரிப்போட வந்து உட்கார்ந்தான்



நான் கொஞ்ச நேரம் அங்கிட்டு இங்கிட்டு பாத்துட்டு பெப்பபே’ன்னு பேந்த பேந்த விழிச்சு பாத்துட்டு



“ஹேய் இங்க பாத்தியா என்கிட்ட புது பல்பம் இருக்கே”ன்னு அசடு வழிய காட்டினேன் அவனிடம்



அதுக்கு அவன் ”ஹை எங்கடா வாங்கினே புது பல்பம் இம்புட்டு நீளாமா இருக்கு” என்று உலக அதிசயத்தை முதல் முதலாக கண்டது போல் கண்களை நீளமாக விரித்து கேட்டான்.



அவன் பார்வையை பாத்ததும் நான் அந்த பல்பத்தை சடக்கென்று சட்டைப்பைக்குள் எடுத்து ஒளித்துகொண்டேன்....



சிறிது நேரத்திற்குள் பக்கத்திலிருந்தவன் பயத்தோடு “டேய் என் பல்பம் சின்னதா இருக்குடா உன் பல்பத்துல கொஞ்சம் உடைச்சி குடேன் நான் எழுதிட்டு தரேன்”



“ம்ஹூம் தரமாட்டேன் போடா நான் இன்னிக்கு தான் இந்த பல்பம் வாங்கினேன் இதையே இந்த வாரம்புல்லா எளுதனும்னு எங்கம்மா சொல்லிருச்சு நான் தரமாட்டேன் போடா” என்றேன் நான்...



”டேய் குட்ரா நான் வூட்டுப்பாடத்தைக்கூட எளுதலைடா கொஞ்சூண்டு குடேன்” என்று வாஞ்சையாக கேட்டும் தரவேயில்லை..



கொஞ்ச நேரத்திற்கு அவனை ஒருவித ஏளன பார்வை பார்த்து மறுபடியும் “இங்க பாத்தியா என்கிட்டே முழுபல்பம் இருக்கே உனக்கு தரமாட்டேனே” என்று கையில் பல்பத்தோடு தூக்கி காட்டிடேன்



அந்த நேரத்தில் தான் பக்கத்திலிருந்த அவன் தூக்கிப்பிடித்த கையிலிருந்து வெடுக்கென்று பல்பத்தை பிடுங்கப்போக, பல்பம் பாதியாக உடைந்து போகும்.......



”அம்மே.......... என் பல்பம் ஏண்டா உடைச்சே என் பல்பத்தை” என்று நம்மவன் வகுப்பு என்றுகூட பார்க்காமல் புரண்டு புரண்டு அழ ஆரம்பித்தேன்



“நான் கேக்கும்போதே நீ குடுத்திருந்தா பிடிங்கிருக்க மாட்டேன்ல” என்று சொன்னதும் நம்மவனுக்கு மூக்கிற்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வர

பக்கத்திலிருந்து பேசியவனின் தலையில் சற்றும் எதிர்பாராமல் “நொங்ங்...”கென்று கொட்டினேன்...



“டேய் என்னை ஏண்டா அடிக்கிறே”என்று அடுத்தவன் அவன் தலைமேல் கொட்டினேன்



சிறிது நேரத்தில் இருவரும் அடிதடி, கிள்ளுவது, சட்டையை பிடிப்பது எல்லாசண்டைகளையும் போட்டிருப்பார்கள், கடைசியில் டீச்சர் வந்ததும் இருவரின் கண்களிலும் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தோடி அமைதியாக உட்கார்ந்திருந்தோம்..



டீச்சர் “டேய் என்னடா இங்கே சண்டை, ஏண்டா நீ அழுவுரே” என்று ஹிட்லர் ஸ்டைலில் கேட்டார்..



வாயைத்திறந்ததுமே “டீச்சர்ர்ர்ர்ர்ர் என் பல்பத்தை இவன் உடைச்சிட்டான் டீச்சர்” மூக்கில் தண்ணி வழியஓஓவென்று கத்தி ஆரம்பித்தேன்



டீச்சர் ”ஏய் வாய மூடு எதுக்கு அழுவுறே இரு உன் பல்பத்தை அவன்கிட்ட இருந்த வாங்கித்தரேன்” என்று அவனை இரண்டு அடி அடித்து கையிலிருந்த பல்பத்தை பிடுங்கி என்னிடம் கொடுத்தார்....



மறுபடி இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பாடத்தை கவனிக்க ஆரம்பித்தோம்..

No comments:

Post a Comment