Friday, September 17, 2010

என் பயணங்களில்......

நேற்றைய நிகழ்வு என் பயணங்களில் ஒரு காமெடியாகவே இருந்தது. இது நாள் வரை மிதிவண்டியில் நான் ஒருமையில் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்தேன். யாருமில்லாத சாலையில் மேகங்களை பாத்துக்கொண்டே காய்ந்து போன மரம் செடி கொடி எல்லாவற்றுடனும் வரண்டு போன நிலங்களையும் சில நேரம் ரசித்து கொண்டே செல்வது வழக்கம். நான் ஒருவரே மிதிவண்டியில் செல்வதால் பயமில்லாமல் எதிரில் யார்வந்தாலும் போனாலும் ஒரு பொறுப்பில்லாம வண்டி ஓட்டிச்சென்று கொண்டிருந்தேன். நடுவில் இதுவரை யாரும் நிறுத்தியது கூட கிடையாது எப்போதாவது செல்போனில் அழைப்பு வந்தால் மட்டுமே நிறுத்திவிட்டு அதனை எடுத்துபேசிவிட்டு அப்படியே மீண்டும் என் பயணத்தை தொடர்வேன். பத்துநிமிட பயணம் தான் இருந்தாலும் அதில் ஒரு ரசனை, சுதந்திரம், விளையாட்டு, சோம்பேறித்தனம், என்னுடைய வழிச்சாலையை பார்க்கும் பொறுப்பு, வானத்தை பார்த்துக்கொண்டே செல்லும்போது ஆகாயத்தில் செல்வது போன்ற ஒரு பிரமை... ம்ம் ம்ம் எல்லாமும் தேவதை ஊர்வலம் வருவது போல பல நேரங்களில் என்னை நானே நினைத்துகொண்டதும் உண்டு.

நேற்று மாலை இதற்கெல்லாம் சற்று தடங்கல் வந்துவிட்டது..... எதிர்பாக்காமல் தான் ம்ஹ்ம் விபத்துகள் எப்போது தான் சொல்லிக்கொண்டு வருகின்றன. சொல்லாமல் ஏற்படுவதைத்தானே விபத்து என்கிறோம்.

மேகங்கள் கருகி பூமியில் கொட்ட ரெடியாக இருந்தது. காற்றிற்க்காக மட்டும் காத்திருந்தது போல. நான் மட்டும் ஆசுவாசமாய் பஸ்ஸில் இருந்து இறங்கி மெதுவாக சாலையை கடந்து வந்துகொண்டிருந்தேன். மொபைல் டொய்ங்... என்று ஒரே சத்தத்தில் நின்றது மெசேஜ் வந்திருந்தது கார்த்தியிடமிருந்து ”மழை வர மாதிரி இருக்கு சீக்கிரம் வீட்டைபோய்ச்சேரு மழைல நனையாதே” வழக்கம்போல அட்வைஸ் மழையை இவன் தொடங்கியிருந்தான்.

”சரி” என்று நானும் பதிலுக்கு ஒரு மெசேஜ் செய்துவிட்டு மிதிவண்டியை தள்ளினேன்... புஸ்ஸ்ஸ் பின்சக்கரத்தில் காற்று இல்லை. அடடே! மழை வர மாதிரி இருக்கு இந்த நேரத்துல சைக்கிள்ல காற்றில்லையே என்று எனக்கு நானே புலம்பிக்கொண்டு பக்கத்திலிருந்த கடைக்கு சென்றேன். அங்கே கூட்டம் பரவாயில்லை, போனவுடன் மிதிவண்டியில் காற்றைநிரப்பிகொடுத்தார் கடைக்காரர்.

“அக்கா என் சைக்கிள் பஞ்சர் ஆகிடுச்சு மழை வரமாதிரி இருக்கரதனால என்னோட சைக்கிளை இங்கேயே விடனுமாம் என்னை உன் சைக்கிள்ல கூட்டிட்டு போறியா” பக்கத்துவீட்டு பையன் எங்கிருந்தோ குதித்தான்.

“டேய் எனக்கு டபுள்ஸ் மிதிக்க வராதே உன்னைய எங்கேயாச்சும் தள்ளிவிட்டா நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்”

”பரவால்லக்கா மழைவரமாதிரி இருக்கு சீக்கிரம் வீட்டுக்கு போலாம் வா” என்று அவசரப்படுத்தினான்

”சரி நான் ஓட்டுரேன் நீ பின்னாடி உட்காரு” பெருமாளை நினைத்துக்கொண்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.

அவனும் வந்து உட்கார்ந்தான், மிதிவண்டி ஆட்டம்போட ஆரம்பித்தது, இதுவரை நான் டபுள்ஸ் மிதித்ததில்லை எனக்கு பேலன்ஸ் செய்யவும் தெரியவில்லை, ”டேய் வண்டியை ஆட்டாதே ஒழுங்கா உட்காரு” என்று அவனை கவனப்படுத்திக்கொண்டு அந்த சாலை முழுவதும் வளைந்து வளைந்து ஓட்ட ஆரம்பித்தேன்.

எதிரில் மாட்டுவண்டி, எனக்கு தூரத்தில் வரும்போதே பகீர் என்றது மாட்டுவண்டி வரும்போது கவனமாக ஒரே நேர்கோட்டில் ஓட்டவேண்டும் என்று என்னை உசார்படுத்திக்கொண்டு மெதுவாக ஓட்டிக்கொண்டு வந்தேன். மாட்டுவண்டி கிட்ட நெருங்க ஆரம்பித்தது,

அவனை மறுபடியும் கவனப்படுத்தினேன், டேய் மாட்டுவண்டி வருது ஒழுங்கா உட்காரு” எனக்கு லேசான பயம் தொற்றிக்கொண்டது. மாட்டுவண்டி அருகில் ஓட்டிக்கொண்டு வர ஆரம்பித்தேன்.

இப்போது பின்னால் இருந்தவன் சும்மா உட்கார்ந்திருந்தால் பிரச்சனையில்லை அந்த மாட்டை செல்லமாக ஒரு தட்டு தட்டப்போனான், சின்னப்பையனில்லையா எதோ ஆசையாக தட்டினான், அவ்வளவு தான் சைக்கிள் டொய்ங்ங்ங்...... என்று முன்னோக்கி வளைந்து நானும் நிலைதடுமாறி பேலன்ஸ்சை இழந்து விழுந்தேன்.... பின்னாடி இருந்தவன் உசாராக சைக்கிளில் இருந்து குதித்துவிட்டான். நான் விழுந்து முட்டிக்காலில் அடிவாங்கி மெதுவாக எழுந்தேன்.

அம்மே!! சாதாரண கீறல் தான் மண்சாலை தானே..சுதாரித்துகொண்டு எழுந்தேன்.அதற்குள் அவன் சைக்கிளை தூக்கிவிட்டான்

”என்னக்கா அடிபட்டிருச்சா” அவனுக்கு இப்போ உண்மையான பயமும் தெளிவும் தொற்றிக்கொண்டது.

”இல்லடா ஒன்னுமில்லை இப்போ நீ சரியா உட்காரு கூட்டிட்டுபோறேன்” என்று சமாளித்தேன்.

அக்கா பயப்படாம ஓட்டுங்க ஒன்னும் ஆகாது என்று அவன் எனக்கு தைரியம் கூறி இம்முறை தைரியத்தை துணையாகக்கொண்டு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று தைரியமாக ஓட்ட ஆரம்பித்தேன், மழையும் தொடங்க ஆரம்பித்து விட்டது.

2 comments:

  1. அடடா வாணி ரொம்ப அடியோ...முதல்பத்தி ரொம்ப சுவையா இருந்தது....உன்னைய நம்பி சைக்கிள் ஏறிய புள்ளைய இப்படியா பண்ணுவ நீ. நல்லா நனைஞ்சியா?

    //இம்முறை தைரியத்தை துணையாகக்கொண்டு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று தைரியமாக ஓட்ட ஆரம்பித்தேன்,//

    இதான் இந்த நம்பிக்கை தான் வேண்டும்..

    ReplyDelete
  2. பார்த்து கண்ணு பத்திரம்

    நல்ல ப்ளோ

    ReplyDelete