Tuesday, August 3, 2010

சின்ன பாப்பா!

”ஆண்ட்டி ஆண்ட்டி வாங்க எங்க வீட்ல ஒரு குட்டி பாப்பா பிறந்திருக்கே” என்றவாறு எதிர்வீட்டை நோக்கி காயத்ரி ஓடிவந்தாள்


என்ன சொல்றே காயத்ரி உங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டாளா” பக்கத்துவீட்டு பார்வதி கேட்டாள்

ஆமா ஆண்ட்டி வாங்க எங்க வீட்டுக்கு” என்று ஆசையோடு அழைத்தாள் காயத்ரி

பார்வதி நேர்எதிர் வீட்டிலிருக்கும் காயத்ரியின் அம்மா அகல்யாவை பார்க்க வந்தாள்

அந்த கிராமத்தில் ஒரு நடுத்தர கிராமத்தில் வசித்து வரும் அகல்யாவின் குடும்பம். அகல்யா இரண்டாவது பிரசவம் முடிந்து பிஞ்சுக்குழந்தையோடு வீட்டிற்கு அப்போது தான் ஆட்டோவிலிருந்து வந்திறங்கி இருந்தாள்.

அதற்குள் நான்கு வயது நிரம்பியிருந்த சுட்டிப்பெண் காயத்ரி ஓடிப்போய் தனக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்கிறது என அவளின் தெருவிலிருக்கும் அனைவரிடமும் தம்பட்டம் அடித்து கூறிவிட்டாள்.

பார்வதியும் ஓடோடி வந்து பாசத்தோடு குழந்தையை எடுத்துக்கொண்டு கொஞ்சினாள். அவசரத்திற்கு சுடுதண்ணி வைத்துக்கொடுத்து அவள் வீட்டிலிருந்து சிற்றூண்டியை கொண்டுவந்து கொடுத்து சாப்பிடக்கொடுத்தாள்.

சற்றே ஓடியிருந்த ஐந்து நிமிடங்களில் அகல்யாவின் மாமியார் மாரியம்மாள் வயலுக்கு சென்று விறகு வெட்டியெடுத்துக்கொண்டு ஆயாசமாக வந்திறங்கினாள். சிறிது நேரம் வீட்டுத்திண்ணையில் இளைப்பாற்றிக்கொண்டாள்.

வீட்டிற்கு வந்திறங்கிய மருமகளையும் தன் பேரப்பிள்ளையும் பார்க்க வீட்டிற்குள் நுழைந்தாள். மாமியார் மாரியம்மாள் வீட்டில் நுழைந்த அடுத்த நொடி பூகம்பம் வெடித்தது அந்த வீட்டில்.............


“என்ன கருமம் வந்து பொறந்திருக்கு, என் மகனை கடன்காரனாக்கவே பிள்ளைய பெத்துகிட்டு வந்திருக்கா, முதல்ல பொறந்ததே பொட்டப்புள்ள, இதுல இரண்டாவதும் இதே மூதேவி வந்து பொறந்திருக்கே” என்று வரிந்துகட்டிக்கொண்டு வசைபாட ஆரம்பித்துவிட்டாள் மாரியம்மாள்.

அகல்யா கண்கள் நிறைய மடைகட்டிய வெள்ளம் போல நீரைக்கோர்த்துகொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். அத்தைக்கு என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தாள்.

இந்த ரகளைகளையெல்லாம் அறிந்திராத காயத்ரியோ ஊரெல்லாம் ஆனந்த மழை பொழிந்து விட்டு தங்கச்சிபாப்பாவை ஆசையோடு கொஞ்ச வீட்டைநோக்கி வந்தாள். தன் சிற்றறிவுக்கு எட்டிய வரை வீட்டில் ஏதோ பிரச்சனை என்பதை மட்டும் ஊகித்துக்கொண்டாள். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்திக்கொள்ளாமல் அந்த பிஞ்சுக்குழந்தை நோக்கி வந்து அருகில் உட்கார்ந்தாள்.

ஒரு வித பயத்துடனே தன் மெல்லிய விரல்களால் லேசாக பிஞ்சுக்குழந்தையின் பூப்போன்ற விரல்களை தொட்டுக்கொண்டு தன் உடலை சிலிர்த்தாள். அந்த பிஞ்சின் ஸ்பரிசம் காயத்ரிக்கு எதோ ஒரு வித பாசத்தை குழந்தையின் மீது ஏற்படுத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் விரல்களைத்தொடுவதும், தலையை கோதுவதுமாக தன் சேட்டைகளை ஆரம்பித்துவிட்டாள் காயத்ரி.

ஒருபுறம் இவளின் கொஞ்சல்கள் தொடர்ந்துகொண்டிருக்க, மாரியம்மாளின் வசைகள் அகல்யாவை புண்படுத்திக்கொண்டிருந்தன.முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை பெண் இரண்டாவது பிரசவத்திலும் பெண்குழந்தையும் என்பதால் மாரியம்மாளின் ரத்தக்கொதிப்பை அதிகப்படுத்தியிருந்தது.

உடனே மாரியம்மாள் மருமகளை வசைபாடியதோடு நில்லாமல் அருகே கொல்லையிலிருந்த கள்ளிச்செடியை நோக்கி புறப்பட்டாள். கள்ளிச்செடியில் நான்கைந்து கிளைகளை பறித்து குண்டுகல்லை எடுத்து அதை நசுக்கி பாலினை ஒரு கிண்ணத்தில் சேகரித்துகொண்டிருந்தாள்.

இதைப்பார்த்த அகல்யா “ஓ”வென அழ ஆரம்பித்துவிட்டாள். ”வேண்டாம் அத்தை தயவு செஞ்சு இந்த பிஞ்சுக்குழந்தையை கொன்னுடாதீங்க” என்று அவளின் உச்சக்கட்ட உரத்த குரலினால் கத்தி கதறி கெஞ்சிக்கேட்டுக்கொண்டாள்.

மாரியம்மாள் “இந்த கடன்காரிகளை வச்சிக்கிட்டு என்ன பண்ண சொல்ரே என் மவன் வாழ்க்கை பூரா கஷ்டப்பட்டாலும் இதுங்களுக்கெல்லாம் சடங்கு கல்யாணம் சீர்வரிசைன்னு செஞ்சி செஞ்சி ஓய்ஞ்சுபோய்டுவான். இந்த கருமாந்திரத்தையெல்லாம் இப்பவே முடிச்சிடலாம். அமைதியா கொஞ்ச நேரம் சும்மா இரு” என்று அவளின் முடிவிலிருந்து மாறாமல் பாலை எடுத்துக்கொண்டிருந்தாள்.

சூரியன் வீசிவிட்ட கதிர்களையெல்லாம் தனக்குள் முடக்கி கொண்டிருந்த மாலைவேளையில் அகல்யாவின் கணவன் அசோகன் நாள் முழுதும் பட்டபாட்டில் ஓய்தொழிந்து வந்திருந்தான்.

அசோகன் தனக்கு பிறந்திருந்த இரண்டாவது குழந்தையை பார்த்து மகிழ்ச்சியடைந்திருந்தான். ஆனாலும் தன்னுடைய அம்மாவின் பேச்சை தட்டுபவனில்லை. அம்மாவின் வாக்கு வேதவாக்காக கொண்டு செயல்படுபவன் தான்.

வீட்டில் நடந்த பிரச்சனைகளையெல்லாம் ஓரளவுக்கு ஊகித்து இருந்த காயத்ரி ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அகல்யா மட்டும் அழுதுகொண்டே இருந்தாள். அசோகனும் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொல்ல நினைக்கும் அம்மாவின் கொடூரத்தை அறிந்திருந்தான்.

அசோகன் தன் இரண்டாவது குழந்தையை எடுத்து ஒரு முறை பார்த்துகொள்ளவேண்டுமென்ற ஆவலில் கையில் எடுத்துகொண்டான். காயத்ரியும் தன் அப்பாவிடம் வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

”அப்பா குட்டிப்பாப்பா அலகா இருக்குல்ல” என்று சிலாகித்துக்கொண்டாள்

ஏதும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான் அசோகன்.

”அப்பா ஏன்ப்பா அம்மா அழறாங்க”

“.............” இதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்

“அப்பா பாட்டி இந்த பாப்பாவை கொன்னுடுவாங்கலாப்பா” என்று மழலை மாறாத மொழியில் கேட்டாள்.

மகளின் வார்த்தைகளைகேட்டதும் அசோகனுக்கு சுளீர் என்று குத்தியது போல் இருந்தது.

மாரியம்மாள் வேகமாக அசோகனின் கையிலிருந்து அப்போதே பூத்திருந்த மலரைப்போன்றிருந்த குழந்தையை வெடுக்கென பிடுங்கச்சென்றாள்.

அசோகன் முதல் முறையாக அம்மாவின் பேச்சுக்கெதிராக வேண்டாம் இந்த குழந்தையையும் நாம வளர்க்கலாம். நான் எப்பாடுபட்டாவது என் மகள்களை வளப்பேன் என்று உறுதியாககூறிவிட்டு கள்ளிப்பாலை தட்டிவிட்டான்.

மாரியம்மாளுக்கு முகத்தில் அறைந்தது போலிருந்தாலும் தன்னுடய மகனின் தன்னம்பிக்கைக்கு எதிராக பேசமுடியாமல் அமைதியாகிவிட்டாள்.

4 comments:

  1. ada kavitah ithu old ano okey puthsha poduma ippaiku vinay annaaaaaaaaaaaa
    \

    ReplyDelete
  2. கொடுமை
    ஆனால் இப்ப கொஞ்சம் மாறிடுச்சுனு நினைக்கிறேன்

    ReplyDelete
  3. நல்ல முயற்சி கவிதா

    ReplyDelete